Saturday, August 17, 2013

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் மனு

2ஜி அலைக்கற்றை வழக்கில் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய சம்மனை எதிர்த்து, அனில் அம்பானி தம்பதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது தீர்ப்பு வரும் வரை காத்திருக்குமாறு கோரி சிபிஐ நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் மனுத் தாக்கல் செய்துள்ளது.

திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு நிறுவனங்களுக்கும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு காரணமாக அரசுக் கருவூலத்துக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி. தனது அறிக்கையில் தெரிவித்தது. 2ஜி வழக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஒதுக்கீட்டைப் பெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான அனில் அம்பானி தம்பதி இவ்வழக்கு தொடர்பாக  நேரில் ஆஜராவதற்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 19ஆம் தேதி சம்மன் அனுப்பியது. அனில் அம்பானி ஆகஸ்ட் 22ஆம் தேதியும், அவரது மனைவி டினா அம்பானி ஆகஸ்ட் 23ஆம் தேதியும் ஆஜராக வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இது தொடர்பான மனுவை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தங்கள் மனு மீது தீர்ப்பு வரும் வரை காத்திருக்குமாறு கோரி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்தது.  அந்த நிறுவனம் சார்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ""விசாரணை நடவடிக்கைகளுக்கு நாங்கள் தடை விதிக்குமாறு கோரவில்லை. ஆகஸ்ட் 19 மற்றும் 21ஆம் தேதிகளில் கூடுதல் சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கை. அவர்களின் மனுவை உச்ச நீதிமன்றம் வரும் 21ஆம் தேதி விசாரிக்க உள்ளது. அதுவரை சிபிஐ நீதிமன்றம் காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் மற்ற சாட்சிகளை விசாரிக்கலாம்'' என்று தெரிவித்தார்.

இதையடுத்து, ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த மனு தொடர்பாக ஆகஸ்ட் 21ஆம் தேதி பதிலளிக்குமாறு சிபிஐ தரப்புக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

நன்றி : தினமணி

No comments:

Post a Comment